''இந்தியாவின் செயலால் அமெரிக்கர்களுக்கு நஷ்டம்..." ட்ரம்ப்பின் ஆலோசகர் கருத்து


 
தொடர்ச்சியாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் உக்ரேன் மீதான உக்கிர தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ளார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்தது.

ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும்.

இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பிரபல வணிக ஊடக நிறுவனத்துடனான நேர்காணலில் முக்கிய பல விடயங்களை தெரிவித்துள்ளார்.

அதில்,

 “மேற்கத்திய நாடுகளின் கடுமையான அழுத்தத்தையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கி வரும் இந்தியாவை தண்டிக்கும் நோக்கில் இந்த 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா அதை நிறுத்தினால் நிச்சயம் கூடுதல் வரி விதிப்பு குறைக்கப்பட்டு வெறும் 25 சதவீதம் மாத்திரமே வரி விதிக்கப்படும்.

இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்ற காரணத்தால் உக்ரேன் - ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய தரப்புக்கு மறைமுக உதவி கிடைக்கிறது.

அந்த நிதி ஆதாரத்தை கொண்டுதான் ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை தொடர்கிறது. இதன் மூலம் ரஷ்ய யுத்தம் செய்ய இந்தியா உதவுகிறது. இந்தியாவின் இந்த செயல் அமெரிக்கர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

இதேநேரம் உக்ரேனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. அதற்கான நிதி ஆதாரம் அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிதான்.

அதனால் தான் இந்தியாவின் இந்த செயல் அமெரிக்கர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது என்கிறேன்.

நாங்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்குவோம். அது எங்கள் உரிமை என சொல்கிறது இந்தியா. அதே நேரத்தில் அதிக வரிகள் கூடாது என சொல்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.